
தொடர்ந்து ஏதாவது மாற்றங்களையும் புதிய அப்ளிகேஷன்களையும் தருவது கூகுளின் செயல் தன்மை என்றாலும் சென்ற 2008 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லாமே முள் பாதையின் மீது நடந்து வந்து மேற்கொண்ட வெற்றிகளாகவே அமைந்தன. சென்ற ஆண்டில் தான் அதன் தேடல் மற்றும் தேடல் தளங்களில் விளம்பரம் என்ற எல்லைகளைத் தாண்டி தன் சேவைகளை அதிகமாக விரிவுபடுத்தியது எனலாம். ஆண்டின் தொடக்கத்திலேயே டபுள் கிளிக் என்ற நிறுவனத்தை கூகுள் வாங்கியது.
இதில் பல எதிர்ப்புகளைச் சந்தித்தது. 310 கோடி டாலர் கொடுத்து வாங்கிய இந்த நிறுவனத்தினால் கூகுள் கிராபிகல் டிஸ்பிளே விளம்பரங்களை சிறப்பாக வெளியிட முடிந்தது. அடுத்ததாக கூகுள் அப்பிளிகேஷன் இஞ்சின் என்ற புராஜக்டை வெளியிட்டது. இதில் அடிப்படை பயன்பாடுகள் இலவசமாகத் தரப்பட்டன. மிகப் பயன்தரும் அப்ளிகேஷன்களுக்கு கூகுள் பணம் கேட்டது. கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு தேவையானதைப் பெற்றுக் கொண்டு போ என்ற இணைய பழக்கம் இதிலிருந்து தொடங்கி அதற்கு cloudcomputing concept என்ற பெயரும் தரப்பட்டது.
கூகுள் அப்ளிகேஷன்ஸ்
(Google Apps) டாகுமெண்ட்ஸ், ஜிமெயில், காலண்டர் இணைந்து தரப்பட்டதால் மைக்ரோசாப்ட் மற்றும் எக்சேஞ்சுக்கு போட்டியாக இருக்குமோ என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனாலேயே மைக்ரோசாப்ட் தன் ஆபீஸ் தொகுப்பினை cloudcomputing concept அடிப்படையில் இணையத்தில் கொண்டு வந்தது. கூகுள் தரும் போட்டியை சமாளித்தது. அதனாலேயே கூகுள் தன்னிடத்தில் கட்டணம் செலுத்தியவர்களுக்கு 99.9 சதவிகிதம் இந்த சேவைகள் கட்டாயம் கிடைக்கும் என்ற உறுதி மொழியைத் தந்தது.
சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தான் கூகுள் தன் பெரிய வெடிகுண்டினைப் போட்டது. அதுதான் பிரவுசர் உலகில் தன் பங்குக்கு கொண்டு வந்த குரோம் பிரவுசர். இருக்கின்ற அனைத்து பிரவுசர்களிலும் அதிவேகமான பிரவுசர் என்ற பெயரை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட வகையில் தான் ஒரு பிரவுசர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நம் மக்களுக்கு இதன் சில விடுதல்கள் பிடிக்கவில்லை.
இருப்பினும் குரோம் எப்படியும் விரைவில் முதல் இடத்தைப் பிடித்துவிடும் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் கூகுள் இணையப் பயன்பாடு அனைத்தையும் தன் பக்கம் திருப்ப முயற்சிக்கிறது என்பதனை அனைவரும் உணர்ந்து இருக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே கூகுள் டாக்ஸ் மற்றும் ஜிமெயில் வசதிகளைத் தொடர்ந்து கூகுள் மேம்படுத்திக் கொண்டு வருகிறது.
அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில் குரோம் பிரவுசரின் அடுத்த மேம்படுத்தப் பட்ட பதிப்பு குரோம் 1.0 னை வெளியிட்டது. இன்டர்நெட் அதிகமாகப் பயன்படுத்த பல்வேறு சாதனங்களைத் தந்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதுதான் கூகுளின் நோக்கம் என்பது மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து வெளிவந்த ஆண்ட்ராய்ட் மொபைல் இயக்கத் தொகுப்பின் பின்னணியும் இதுதான். ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் ஒரு இயக்கத் தொகுப்பினை ஏற்படுத்த வேண்டும் என பல நிறுவனங்களை ஒருங்கிணைத்து தான் அதற்கு தலைமையேற்று கூகுள் ஆண்ட்ராய்ட் தொகுப்பைக் கொண்டு வந்தது. சென்ற அக்டோபரில் டி–மொபைல் நிறுவனம் ஆண்ட்ராய்ட் அடிப்படையில் இயங்கும் முதல் மொபைல் போனை வெளியிட்டது.
பலவாறான ஆர்ப்பரிப்புடன் வெளியிடப்பட்ட இந்த போனுக்கு பாராட்டுக்கள் சிறிது அடங்கியே பெறப்பட்டன. 2009ல் அதிக மாடல் போன்கள் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயக் கத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேடல் தள முடிவுகளுக்கு அருகே விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. விளம்பரங்களைத் தந்தவர்கள் இணையத்தில் உலா வருபவர்கள் அதன் மீது கிளிக் செய்தால் மட்டுமே கூகுள் நிறுவனத்திற்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற வகையில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. பொருளாதார மந்த நிலையில் இது போன்ற கட்டணச் சலுகை பல நிறுவனங்களை கூகுள் பக்கம் வரச் செய்தது. இதனால் கூகுள் வருமானம் எங்கோ சென்றது. இவ்வகையில் இதன் போட்டியாளரான யாஹூ அருகே கூட நெருங்க முடியவில்லை.
மைக்ரோசாப்ட் கூகுள் நிறுவனத்திற்கு இணையாக வர முடியாததால் யாஹூவை வாங்கி போட்டியில் சரிக்குச் சரியாக நிற்க முடிவு செய்தது. இந்த காய் நகர்த்தலை மிகவும் சாதுர்யமாக கூகுள் விளையாடியது. யாரும் எதிர்பாராத வகையில், ஏன், யாஹூவே எண்ணிப் பார்க்க இயலாத வகையில் யாஹூ கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. கூகுள் தரும் தேடல் விளம்பரங்களை தன் தளத்தில் காட்ட யாஹூ ஒப்புக் கொண்டது. ஒப்பந்தத்தின் மூலம் முதல் ஆண்டில் 80 கோடி டாலர் வருமானம் கிடைக்கும் என யாஹூ கணக்குப் போட்டது.
கூகுள் இது பற்றிக் கருத்து தெரிவிக்கையில் யாஹூ சுதந்திரமாக இயங்க வேண்டும் எனத் தான் விரும்புவதாக அறிவித்தது. ஆனால் யாஹூ இந்த ஒப்பந்தம் ஏற்பட்டும் தான் இயங்குவதைச் செம்மைப் படுத்த முடியவில்லை. பிப்ரவரியில் மிகப் பெரிய எண்ணிக்கையில் தன் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.டிசம்பரிலும் 1,250 பேர் வெளியே தள்ளப்பட்டனர். இந்தக் குழப்பத்தில் யாஹூவின் தலைமை அதிகாரி ஜெர்ரி யாங் துண்டை உதறித் தோளில் போட்டுவிட்டு ஆளை விடுங்கப்பா என்று ஜகா வாங்கிக் கொண்டார்.
தொடர்ந்து அமெரிக்க நாட்டின் நீதித்துறை யாஹூ – கூகுள் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூகுள் யாஹூவினைக் காப்பாற்ற நீட்டிய கரத்தை இழுத்துக் கொண்டது. அதனைக் கேள்விப்பட்டு யாஹூவைக் காப்பாற்ற வந்த கூகுள் மற்றும் ஒப்பந்தம் செய்த யாஹூவினையும் பார்த்து மைக்ரோசாப்ட் கை கொட்டி கேலிச் சிரிப்பு சிரித்தது. இந்த போராட்டத்தில் காயம் பட்டது யாஹூ தான். கூகுள் மீண்டும் பின் வாங்கி தன் காரியத்தில் கண்ணாய் இருக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு மேலும் பல புதிய சாதனங்களையும் வசதிகளையும் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக